கரோனா தடுப்பூசி அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐநா சபையில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து பரவத்தொடங்கிய கரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இவ்வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. அவற்றில் பல ஆய்வுகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐநா சபையின் 75 ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் கரோனா தடுப்பு மருந்து குறித்துப் பேசியுள்ளார்.
அதில் அவர், "கரோனா வைரஸ் எவ்வாறு பரவியது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். எந்த ஒரு நாட்டையும் குறை கூறுவது என் நோக்கமில்லை. அதே வேளையில், முன்னாள் கரோனா நோயாளி என்ற அடிப்படையில் நான் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் இனி நம்மை தற்காத்துக் கொள்ள உதவும். உலக அளவில் நூறுக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பு மருந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தால் அஸ்ட்ராசெனகா நிறுவனம் அதை உலகம் முழுக்க விநியோகிக்கத் தயாராக உள்ளது. மேலும் அஸ்ட்ராசெனகா நிறுவனம் 100 கோடி டோஸ் தடுப்பூசிகளை நடுத்தர நாடுகளுக்கு விநியோகிக்க இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. சோதனை வெற்றிகரமாக முடிந்து கிடைக்கும் தடுப்பூசி அனைத்து நாடுகளுக்கும் சரியான அளவில் கிடைக்க வேண்டும். அது தான் அனைத்து நாட்டு மக்களையும் பாதுகாக்கும்" எனப் பேசினார்.