
24 நாட்களுக்கு பின்னர் நியூஸிலாந்து நாட்டில் இருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து நாட்டில் பிப்ரவரி 26 அன்று முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அன்றிலிருந்து தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார் அந்நாட்டுப் பிரதமர் ஜெஸிந்தா. மார்ச் 19 க்குள் அதன் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டு மார்ச் 26 முதல் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மொத்தம் அந்நாட்டில் இதுவரை நோய்ப் பாதித்தோருடன் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படும் 2,67,435 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், NZ COVID Tracer என்ற செயலியின் மூலம் மக்களின் ஆரோக்கியம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தொற்று மெல்ல கட்டுப்பாட்டிற்குள் வந்து கடந்த மாதம் அந்நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பினார். இதனையடுத்து கரோனா பாதிப்பு இல்லாத தேசமாக மாறியது நியூஸிலாந்து. அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்புநிலை மெல்ல திரும்பியது. இந்த சூழலில் 24 நாட்களுக்கு பின்னர் அங்கு புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.