துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது உலகம் முழுவதும் உள்ள மக்களை கடும் பீதியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
துருக்கியில் நேற்று முன்தினம் இந்திய நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நிலநடுக்கத்தின் போது துருக்கியில் தங்கியிருந்த கானா நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு மாயமானதாகத் தகவல் வெளியானது. மேலும், அவர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கிறிஸ்டியன் அட்சு பத்திரமாக இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக துருக்கிக்கான கானா நாட்டு தூதர் தெரிவித்து உள்ளார். இதனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் கானா அணிக்காக விளையாடிய அட்சு பல விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.