தேர்தல் தோல்விக்குப் பின்னர் முதன்முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவையான நிலையில், பைடன் 306 தேர்தல் சபை வாக்குகள் பெற்றார். ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 232 தேர்தல் சபை வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். ஜனவரி 20 ஆம் தேதி பைடன் அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் சூழலில், பைடனின் வெற்றியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகக்கூறி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்நிலையில், தேர்தல் தோல்விக்குப் பின்னர் முதன்முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அப்போது அவரிடம் "வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்களா?" எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "நிச்சயமாக வெளியேறுவேன். அது உங்களுக்கே தெரியும். ஆனால், வருகிற ஜனவரி 20 ஆம் தேதிக்குள் பல்வேறு சம்பவங்கள் நடைபெறும் என நான் நினைக்கிறேன். பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் சபை உறுப்பினர்கள் வாக்களித்து அதில் பைடன் அதிபராக உறுதி செய்யப்பட்டால், நான் அதனை ஏற்றுக்கொண்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன். ஆனால், அதுவரை தேர்தலில் நடைபெற்ற ஊழலை எதிர்த்துத் தொடர்ந்து போராடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.