தனியார் ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 13 பேரும் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் மெக்ஸிகோவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து, மெக்சிகோவின் மான்ட்டெர்ரி நகருக்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று 10 பயணிகள் மற்றும் 3 விமான பணியாளர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு சென்றது.
இந்த விமானம் மெக்சிகோவின் மோங்கிலோவா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனையடுத்து இந்த விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இரண்டு நாள் தேடுதலுக்கு பிறகு மெக்ஸிகோவின் ஒகாம்போ நகரில் இரு மலைகளுக்கிடையே அந்த விமானம் விழுந்து தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு சென்று பார்த்த போது விமானத்தில் பயணம் செய்த அனைவரும் அதனுள்ளேயே எரிந்து கரிக்கட்டையாகியிருந்தனர். ஆய்வு செய்த போது கட்டுப்பாட்டை இழந்து விமானம் கீழே விழுந்த நிலையில் அதன் எரிபொருள் டேங்க் வெடித்துள்ளது. இதனால் மொத்த விமானமும் எரிந்து பயணம் செய்தவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.