Skip to main content

தேர்வு செய்யப்பட்ட ஜப்பானின் அடுத்த பிரதமர்!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

fumio kishida

 

ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு பதவி விலகினார். யோஷிஹிதே சுகா புதிய பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், யோஷிஹிதே சுகா தலைமையிலான அரசு கரோனா தொற்று பரவலைக் கையாண்ட விதம் குறித்து ஜப்பான் மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது.

 

இதனையடுத்து ஜப்பான் பிரதமர் யோஷிஹிதே சுகா, தனது கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். பிரதமர் யோஷிஹிதே சுகா தற்போது ஆட்சியில் உள்ள சுதந்திர ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவராவார். சுதந்திர ஜனநாயக கட்சியே ஜப்பான் நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறது என்பதால், அக்கட்சியின் தலைவரே நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்தச் சூழலில்  யோஷிஹிதே சுகா, தான் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததால், ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தற்போது சுதந்திர ஜனநாயக கட்சித் தலைவருக்கான தேர்தலில் ஃபுமியோ கிஷிடா வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து இவர் ஜப்பான் நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

 

ஃபுமியோ கிஷிடா ஏற்கனவே 2012 - 2017இல் ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தலைவருக்கான தேர்தலில் தற்போதைய பிரதமர் யோஷிஹிதே சுகாவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்