பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த நிதியை நிறுத்தி வைத்தது அமெரிக்கா!
பாகிஸ்தானுக்கு பல வருடங்களாக வழங்கிவந்த இராணுவ நிதியை அமெரிக்க நிறுத்திவைத்துள்ளது.
பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாத செயல்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வந்துள்ளதாகவும், அதன் போக்கை நிறுத்திக்கொள்ளாவிட்டால் அமெரிக்கா நீண்டகாலமாக வழங்கிவரும் நிதியை அமெரிக்கா நிறுத்திவைக்கும் எனவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், ‘கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்கா 33 பில்லியன் டாலர்களுக்கும் மேல் பாகிஸ்தானுக்கு நிதியாக வழங்கியுள்ளது. ஆனால், அது எங்களுக்கு பொய்யையும், வஞ்சகத்தையும் தவிர வேறெதெயும் தரவில்லை. எங்கள் நாட்டு தலைவர்களை அது முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் எங்கள் மீதான் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் உடைந்தையாக இருந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு வளைந்து கொடுக்கும் அதன் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், அதற்கு வழங்கிவரும் நிதியை நிறுத்திக்கொள்ள நேரிடும்’ என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ‘தீவிரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டங்களுக்கு அமெரிக்கா செலவழித்த மொத்த தொகையையும் திருப்பி செலுத்த தயாராக இருக்கிறோம். ஆப்கானிஸ்தானில் தோற்றுப்போன அமெரிக்கா எங்களை இதில் பலிகெடா ஆக்குவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலில், ‘பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த ரூ.1,623 கோடி இராணுவ நிதியை நிறுத்தி வைக்கிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான அதன் போக்கைப் பொறுத்தே மீண்டும் அதை வழங்குவது குறித்து பரிசீலிப்போம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.