கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும் எதிர்ப்பும் கிளம்பியது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை நேற்று (11-12-23) வழங்கியது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கினார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், இந்த தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜலில் அப்பாஸ் ஜிலானி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “சர்வதேச சட்டம், இந்தியாவின் ஒருதலைபட்ச மற்றும் சட்டவிரோத நடவடிக்கையை அங்கீகரிக்காது. இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எந்த சட்டப்பூர்வ மதிப்பும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, காஷ்மீரிகள் யாராலும் பறிக்க முடியாத சுய நிர்ணய உரிமையைப் பெற்றுள்ளனர்” என்று தெரிவித்தார்.
அதேபோல், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ஐக்கிய சபையின் தீர்மானங்களுக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் மூலம் சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது. இது ஒருதலைபட்சமான தீர்ப்பு. கோடிக்கணக்கான காஷ்மீரிகளின் தியாகத்தை இந்திய உச்சநீதிமன்றம் காட்டிக் கொடுத்துள்ளது. இந்த பாரபட்சமான தீர்ப்பால் காஷ்மீரின் சுதந்திரப் போராட்டம் இன்னும் வலுவடையும். காஷ்மீரிகளின் உரிமைக்காக குரல் எழுப்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.