பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. அவரது அரசு ஊழல் மற்றும் அதிகாரத்துவ பிரச்சனைகளால் சிதைக்கப்பட்ட அமைப்புக்கான மாற்றாக கருதப்பட்டது.
ஆனால் தற்போது இம்ரான் கானின் அரசு, வீழ்ந்து வரும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மீட்க போதுமான அளவிற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனதிற்கு உள்ளாகியுள்ளது. அதேபோல் உயர்ந்து வரும் எரிவாயு விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் இம்ரான் கானின் அரசின் மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இம்ரான் கான், தனது அரசாங்கத்தின் தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர், “தொடக்கத்தில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வர விரும்பினேன். ஆனால் நிர்வாக அமைப்பிற்கு அதிர்வை தாங்கும் திறன் இல்லாததால் அதை செய்ய முடியவில்லை. அரசாங்கம் மற்றும் அமைச்சகங்களால் எதிர்பார்த்த முடிவுகளை வழங்க முடியவில்லை. அரசாங்கத்திற்கும் நாட்டின் நலனுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லாதது மிகப்பெரிய பிரச்சனை” என தெரிவித்துள்ளார்.