ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்த நாட்டில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் மனித உரிமை மீறல்களும் நடைபெற்று வருகிறது. குறிப்பாகப் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. பள்ளி, கல்லூரிக்கு பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதோடு பூங்கா, திரையரங்கம் உள்ளிட்ட பொது இடங்களிலும் பணியாற்ற தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.
பெண்கள் கல்வி கற்கக் கூடாது; பணிக்குச் செல்லக் கூடாது. ஆண் துணையின்றி வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. இவற்றை மீறினால் மரண தண்டனை கூட வழங்கப்படும். கடந்த முறை தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது, பெண்களுக்கு விதிக்கப்பட்ட சட்டங்கள் இவை. இம்முறை பெண்களுக்கு சில சுதந்திரங்களை வழங்கப்போவதாக தலிபான் அமைப்பு அறிவித்திருந்தது. ஆனால் அது வெற்று அறிவிப்பாகவே இருக்கிறது. அதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான அழகு நிலையங்களை மூட தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களுக்கான அழகு நிலையங்களுக்கு வாய் மொழியாகத் தடை விதித்த தாலிபான் அரசு பெண்கள் அழகு நிலையங்களின் உரிமையை ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.