
ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அமெரிக்கப் போராட்டக்காரர்கள் சிலர் சட்டசபை கட்டிடத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
கரோனா வைரஸ் தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 11.3 லட்சம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும், 61,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் கரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் அலட்சியம் காட்டுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மெல்லத் தளர்த்தி வருகிறது அரசு. ஆனால் எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மிச்சிகன் மாகாணத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.
அதிபர் ட்ரம்பின் அறிவுரையையும் மீறி, ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகிறார் அம்மாகாண ஆளுநர் கிரெட்சன் விட்மர். ஆனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஊரடங்கைத் தளர்த்த வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் நேற்று மிச்சிகன் சட்டசபை வளாகத்தில் அவசரநிலையை நீட்டிப்பது குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, சட்டசபை வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் துப்பாக்கிகளுடன் அங்குள்ள காவலர்களை மிரட்டியுள்ளனர். மேலும், ஊரடங்கைத் தளர்த்தவும் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து விவாதம் நடைபெற்ற இடத்திற்குச் செல்ல அவர்கள் முற்பட்டபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.