பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை தியாகி எனக் குறிப்பிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியதற்கு உலகளவில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
அல் கொய்தா பயங்கரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடன் கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, அமெரிக்க ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுச் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்நிலையில் பின்லேடனின் இறப்பைத் தியாகம் என்று குறிப்பிடும் வகையில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
தீவிரவாத ஒடுக்குமுறைகளில் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான்கான், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நாம் அமெரிக்காவிற்கு உதவிய விதம் மற்றும் அதற்காக நமது நாடு எதிர்கொண்ட அவமானம் ஆகியவற்றைப்போன்று, பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்த எந்த நாடும் விமர்சிக்கப்பட்டதில்லை. ஆப்கானிஸ்தானில் அவர்கள் வெற்றிபெறவில்லை என்றால், அதற்குக் காரணம் பாகிஸ்தான்தான் என வெளிப்படையாகவே நம்மைக் குறைகூறியிருப்பார்கள்.
அமெரிக்கர்கள் ஒசாமா பின்லேடனை அபோட்டாபாத்தில் கொன்றபோது, இந்த உலகமே நம் மீது குறைகூறியது. ஆனால், இறப்பைத் தொடர்ந்து பின்லேடன் தியாகியாகிவிட்டார். ஷாஹித் கர் தியா (தியாகி). நம் நட்பு நாடு (அமெரிக்கா) நம் நாட்டிற்குள் நுழைந்து நம்மிடம் கூடச் சொல்லாமல் ஒருவரைக் கொன்றது. இது ஒரு பெரிய அவமானம்" எனத் தெரிவித்தார். பின்லேடனை தியாகி என்ற அவரது இந்த பேச்சு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. மேலும், இந்த பேச்சிற்கு இம்ரான்கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.