Skip to main content

'ஒரு வாரம் ஆம்லெட் சாப்பிட மாட்டேன்'-தண்டனை கொடுத்துக்கொண்ட எலான் மஸ்க் 

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
nn

'ஸ்பேஸ் எக்ஸ்' என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் உலக முன்னணி பணக்காரர்களில் ஒருவர் ஆவார். தற்போது டிவிட்டர் வலைதளத்தை எக்ஸ்(x) என்ற பெயரில் நடத்தி வருபவரும் அவரே. பல்வேறு விண்வெளி துறை தொடர்பான ஆராய்ச்சிகளையும், ரோபோக்கள் ஆகியவற்றையும் ஸ்பேஸ் நிறுவனம் கண்டுபிடித்து அதை வெளிப்படுத்தி வருகிறது.
 

அந்த வகையில் சமீபத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட் ஒன்று மத்திய சீனாவின் கோங்கி மலை பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது தானாகவே விண்ணில் பாய்ந்தது. சில நொடிகளில் கீழே விழுந்த ராக்கெட் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது. நடைபெற்ற இந்த விபத்து சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கட்டமைப்பு கோளாறு காரணமாக ராக்கெட் வெடித்துச் சிதறியதாகவும், அந்த மலைப்பகுதி மக்கள் யாரும் வசிக்காத பகுதி என்பதால் யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் நியூயார்க்  டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியை அந்நாட்டு ஊடகவியலாளர் மைக் பெஸ்கா என்பவர் தன்னுடைய வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் .

அதில், யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தெரிவித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பதிலளிக்கும் வகையில் ராக்கெட் வெடித்து சிதறியதில் அங்கு இருந்த ஒன்பது பறவை கூடுகள் அழிந்துள்ளது என பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கான பதிலை எலான் மாஸ்க் தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவில், 'இந்த கொடூர குற்றச்சாட்டுக்கு பரிகாரமாக ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன்' எனக் கிண்டலாக பதிலளித்துள்ளார். ஏற்கனவே எலான் மஸ்க் அதிரி புதிரியான தகவல்களையும், நக்கல் நையாண்டித் தனமான பதிவுகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி  வரும் நிலையில் எலான் மஸ்க்கின் இந்த பதிலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.

சார்ந்த செய்திகள்