எச்1பி விசா விவகாரம் - ஏழரை லட்சம் இந்தியர்களுக்கு பிரச்சனை இல்லை!
எச்1பி விசா மீதான கெடுபிடிகளை அதிகரிக்க அமெரிக்க அரசு மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எச்1பி விசாக்களின் மூலமாக அமெரிக்காவில் தற்காலிகமாகக் குடியேறி, நிரந்தரமாக அமெரிக்கக் குடியுரிமையைப் பெற நினைக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட பல நாட்டவருக்கு இது மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கும் என செய்திகள் வெளியாகின. கிட்டத்தட்ட 7 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் உருவாகும் எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அரசு எச்1பி விசாக்களின் மீதான விதிமுறைகளை கடுமையாக்கக் கோரும் எந்தத் திட்டத்தையும் ஏற்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
‘அமெரிக்க பொருட்களையே வாங்கவேண்டும், அமெரிக்கர்களையே வேலைக்கு எடுக்கவேண்டும்’ என்ற முழக்கத்தை முன்வைத்தே அமெரிக்க அதிபர் பதவியைக் கைப்பற்றினார் டொனால்டு ட்ரம்ப். அவர் பதவியேற்றவுடன் எச்1பி விசாக்களின் மீதான விதிமுறைகளை கடுமையாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
இதன்படி, எச்1பி விசாக்களுக்கான காலகட்டம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே நீட்டிக்கப்படும். அதற்குள் குடியுரிமை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கிடைக்காவிட்டால், சொந்த நாடுகளுக்குத் திரும்பி குடியுரிமை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.