இலங்கையில் பால், மாவு போன்ற உணவுப் பொருட்களும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவையும் கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பாதிப்புகளால் பொங்கி எழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வாகனம் எரிப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. கோத்தபய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய கூட்டணி கட்சிகளும் ஆட்சியை கலைத்துவிட்டு காபந்து அரசை உருவாக்க வேண்டும் என நேற்று வலியுறுத்தி இருந்தன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டும் வரும் பொருட்டு, இலங்கையில் அவசரநிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரகடனப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை வட மாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகப் பொதுச் செயலருமான அனந்தி சசிதரன் தஞ்சாவூரில் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “இந்த பொருளாதார பிரச்சனை என்பது தமிழர்களை அழிப்பதற்கான போருக்காக உலக நாடுகளிடம் கடன் பெற்றதால் ஏற்பட்டது. மேலும், மாறி, மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாலும் இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் பொருளாதார பிரச்சனையை பொருத்தவரை தென் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்குத்தான் புதிய விஷயம். எங்களுக்கு இது புது விஷயமல்ல. சிங்களர்களுக்கு புது விஷயம் என்பதால், அவர்கள் போராடுகின்றனர். ஆனால், இது இன்று, நேற்று ஏற்படுத்தப்பட்ட பொருளாதார பிரச்சனை அல்ல. படிப்படியாக மாறி, மாறி ஆட்சிக்கு வந்தவர்களால் இந்த மோசமான பொருளாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளது” என்றார்.