அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மகனை சந்தித்த விதம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக ராணுவ வீரர் என்றாலே குடும்பத்தினரையும், உறவினர்களையும் விட்டு எல்லைகளில் நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரை பணயம் வைத்து பணியாற்றும் தியாகிகள். அப்படிப்பட்ட ராணுவ வீரர்கள் அத்திப்பூத்தாற்போல ஆண்டில் சில நாட்கள் வீட்டிற்கு வந்து குடும்பத்தினரை சந்திப்பதும், விடுமுறை முடிந்து நாட்டு சேவைக்காக குடும்பத்தாரால் மீண்டும் வழியனுப்பிவைக்கப்படுவதும் ராணுவ வீரர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பத்தினரின் வாழ்வில் மறக்கமுடியாத முக்கிய நிகழ்வாக இருக்கும்.
அப்படிப்பட்ட நிகழ்வில் அதிகம் சர்ப்ரைஸை சேர்ந்துள்ளார் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர். நீண்ட நாட்களுக்கு வீடு திரும்பிய அந்த ராணுவ வீரர் தனது மகன் குத்துசண்டை பயிற்சி செய்துவரும் அரங்கிற்கு சென்றுள்ளார். அப்பொழுது ராணுவ வீரரின் மகன் கண்ணை கட்டி கொண்டபடி பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, அவனருகே சென்ற ராணுவ வீரர் அவனுடன் குத்துச்சண்டையில் ஈடுபடுகிறார். தன்னிடம் யார் குத்துச்சண்டையில் ஈடுபடுகிறார் என்பதை அறிந்திடாத அந்த சிறுவன் பதிலுக்கு அவரை தாக்க, ஒரு கட்டத்தில் கண்ணைக் கட்டியிருந்த துணியை சிறுவன் அவிழ்க்கிறான். அவிழ்த்தவுடன் இவ்வளவு நேரம் நாம் சண்டையிட்டுக்கொண்டிருந்தது தந்தை என்பதை உணர்ந்த சிறுவன், 'டாடி...' என பாய்ந்து கட்டியணைத்து கத்தியபடி கண்ணீர் விட்டது அங்கிருதோரை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரவி வைரலாகி வருகிறது.