பூமியை விண்ணில் இருந்து தாக்க வரும் சீனாவின் விண்வெளி ஆய்வகம்!
‘பூமியை விண்ணில் இருந்து வரும் ஏதோவொன்று தாக்கி அழிவை ஏற்படுத்தப் போகிறது!’ என்ற கதைக்களத்தை மையமாகக் கொண்டு இயக்கப்பட்ட எத்தனையோ ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்த்திருப்போம். தமிழில் கூட அப்படி ஒரு படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படியான நிகழ்வுகளை திரையிலேயே பார்த்து பிரமித்த நமக்கு, அதன் நிஜ பாதிப்புகளைத் தர இருக்கிறது சீனாவின் விண்வெளி ஆய்வகம் ஒன்று.
2011ஆம் ஆண்டு விண்ணிற்கு அனுப்பப்பட்ட சீனாவின் டியான்யாங் - 1 ஆய்வகம்தான் அது. சீனாவின் விண்வெளி ஆய்வுகளுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வகம், கடந்த 2016ஆம் ஆண்டு செயலிழந்துவிட்டதாக அறிவித்தது சீன விண்வெளி ஆராய்ச்சி மையம்.
விண்வெளியில் இதுபோன்ற ஆய்வகங்கள் செயலிழந்தாலும், அவை பெரும்பாலும் பூமியை நோக்கி வருவதில்லை. ஆனால், டியான்யாங் - 1 பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. சுமார் 8.5 டன் எடைகொண்ட இந்த ஆய்வகம், பூமியின் வளிமண்டலத்தை நெருங்கும்போது அதில் உள்ள எரிபொருட்கள் தீப்பிடித்து எரியும் என்றும், பூமியின் நிலப்பரப்பில் வரும் மார்ச் மாத இறுதியில் அது மோதும் என்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.