இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்சனையில் அமெரிக்கா தலையிடுவது முட்டாள்தனமானது எனச் சீனா தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து தற்போது லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் இந்திய- சீன எல்லை பிரச்சனையால் பதட்டம் நிலவி வருகிறது. வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சிக்கிம் பகுதியில் கடந்த மாதம் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்திருந்த அமெரிக்கா, "எல்லை தொடர்பாக இந்தியாவுடன் சீனா மேற்கொள்ளும் தகராறுகள், அந்நாட்டின் ஆக்கிரமிப்பு குணம் வெறும் வார்த்தைகளோடு நின்று விடுவதில்லை என்பதையே காட்டுகிறது. அதிகரித்து வரும் வல்லமையை அந்த நாடு வருங்காலத்தில் எப்படிப் பயன்படுத்த முயற்சி செய்யும் என்பது குறித்த தீவிரமான கேள்விகளை இந்தச் செயல்கள் எழுப்புகின்றன" எனத் தெரிவித்திருந்தது.
அமெரிக்காவின் இந்தக் கருத்துக்குப் பதிலடி தரும் வகையில் கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி ஸாவோ லிஜான், "இந்தியா-சீனா எல்லாப்பிரச்சினையில் அமெரிக்கா கருத்து தெரிவிப்பது முட்டாள்தனமான செயல். நாங்கள் சுமுகமாகப் பேசித்தீர்ப்போம். இதில் அமெரிக்கா தலையிட வேண்டிய அவசியமில்லை. தூதரக ரீதியில் என்னென்ன நடவடிக்கைகள் தேவையோ அதை இருநாடுகளும் செய்து வருகின்றன. எனவே இதில் அமெரிக்காவுக்கு எந்த வேலையும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.