கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது, சீன ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட பத்து இந்திய ராணுவ வீரர்கள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலால், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த மோதலில், இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சீன ராணுவ வீரர்கள் 35 பேர் வரை இந்த மோதலில் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில், மோதலின் போது சிறைபிடிக்கப்பட்ட பத்து இந்திய ராணுவ வீரர்களைச் சீனா விடுவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மோதல் குறித்து இந்தியா வெளியிட்ட அறிக்கையில் சீனாவால் கைது செய்யப்பட்ட இந்திய வீரர்கள் குறித்து எந்தத் தகவலும் இடம்பெறாத நிலையில், தற்போது இருகட்ட உயர் அதிகாரிகள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக 2 உயரதிகாரிகள் உட்பட 10 இந்திய வீரர்களைச் சீனா விடுவித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒப்படைக்கப்பட்ட இந்த வீரர்களுக்கு, மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.