கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்த பிரேசில் அதிகாரிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் 1,09,400 பேர் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த வைரஸ் தொற்று காரணமாக 4600 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாதம் முதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் கரோனாவைக் கட்டுப்படுத்த பல உலக நாடுகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பால்ம் பீச் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைப் பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ சந்தித்துப் பேசினார்.
அப்போது அவருடன் வந்திருந்த பிரேசில் அதிகாரி பாபியோவுக்கு கரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ட்ரம்ப் உடனான சந்திப்பில் அவருடன் பாபியோ உரையாற்றியதோடு, இருவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.