கழிவுநீர் ஓடையில் கிடந்த இளைஞரின் உடல் பாகங்கள்; கை, கால்களை தேடி அலையும் போலீசார்
கோவை திருச்சி சாலையில் உள்ள புலியகுளத்தில் இருந்து சவுரிபாளையம் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை செல்வதற்கான பாலம் உள்ளது.
நேற்று மாலை இந்த வழியாக செல்லும்போது, இந்த பாலத்தின் அடியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அந்த வழியாக சென்றவர்கள் பாலத்தின் அடியில் சென்று பார்த்துள்ளனர்.
அங்கே ஒரு வெள்ளை நிறத்திலான பிளாஸ்டிக் சாக்கு மூட்டையில் உள்ளே ஏதோ கழிவுப்பொருட்கள் சுற்றி வைக்கப்பட்டநிலையில் கிடந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வந்ததால் சந்தேகம் அடைந்தவர்கள் இதுகுறித்து கோவை இராமநாதபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
ரோந்துப்பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து மூட்டையை எடுத்து அவிழ்த்துப் பார்த்தனர். அதில், வாலிபர் ஒருவரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் பாகம் மட்டும் தனியாக இருந்தது. அதன் அருகில் சிறிதாக மற்றொரு பிளாஸ்டிக் சாக்குமூட்டையும் கிடந்தது. அதனை அவிழ்த்து பார்த்தபோது அதில் தலை மட்டும் தனியாக சுற்றி வைக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது சாக்கு மூட்டையில் இருந்த முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு அழுகிய நிலையில் இருந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலில் இருந்து கை மற்றும் கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் பாகம் மட்டும் இருந்தது. ஆனால், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட அந்த பாகங்கள் அங்கு இல்லை.
தகவலறிந்ததும், காவல் உதவி ஆணையாளர்கள் இரமேஷ் கிருஷ்ணன், சுரேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்டவருக்கு சுமார் 35-வயது இருக்கும். வேறு ஏதாவது பகுதியில் வைத்து அவரை வெட்டிக்கொலை செய்து உடலை மட்டும் சாக்குமூட்டையில் கட்டி கழிவு நீர் ஓடையில் வீசிச்சென்று இருக்கலாம் என்றும், இந்த கொலை கடந்த ஏழு நாள் முதல் பத்து நாளுக்கு முன்பு நடைபெற்று இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவையில் காணாமல் போனவர்கள் யார் என்ற பட்டியலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்டவரின் கை மற்றும் கால்கள் கழிவு நீர் ஓடையின் வேறு பகுதிகளில் கிடக்கிறதா...? என்றும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
போலீசார் முதற்கட்டமாக கழிவு நீர் ஓடையில் கைப்பற்றிய உடல் பாகங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- பெ.சிவசுப்பிரமணியம்