விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் டவுன் பகுதியில் உள்ளது சாந்திகாப்பான் கோயில் தெரு. அந்தப்பகுதியை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் யுவராஜ் (22 வயது ) கூலி தொழிலாளியான இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். இவரது எதிர் வீட்டில் வசிப்பவர் ஆறுமுகம், சமையல் தொழிலாளியான இவரது மகன் (22 வயது) தினேஷ் பாபு இவர் ரஜினியின் தீவிர ரசிகர். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களும் கூட, இந்த நிலையில் தற்போது 144 தடை உத்தரவு காரணமாக இரு நண்பர்களும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளனர்.

நேற்று மதியம் இவர்கள் 2 பேரும் மது அருந்திய போதையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கரோனா நிவாரண நிதி அளித்ததில் ரஜினி அதிக நிதி கொடுத்தாரா இல்லை, விஜய் அதிக நிதிகொடுத்தாரா என்று இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்பாபு, யுவராஜை கையால் பலமாக தள்ளியுள்ளார். நிலை தடுமாறி கீழே விழுந்த யுவராஜ், அருகில் கிடந்த கல்லின் மீது தலை பலமாக மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை பார்த்த அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடனடியாக மரக்காணம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தினேஷ்பாபுவை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தினேஷ்பாபு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் யுவராஜ் கொலை செய்யும் அளவுக்கு நாங்கள் இருவரும் விரோதிகள் இல்லை. சம்பவத்தன்று பாண்டிச்சேரி மது ஒரு நண்பர் மூலம் எங்களுக்கு கிடைத்தது. அதை இருவரும் சேர்ந்து சந்தோஷத்துடன் அருந்தினோம். மது போதை அதிகமானதும் கரோனா நிவாரண நிதி அதிகம் கொடுத்தது திரைப்பட நடிகர் விஜயா? ரஜினியா? என்ற வாக்குவாதம் எங்களுக்குள் ஏற்பட்டது.

வாக்குமுற்றி கோபமான நான் அவரை தள்ளிவிட்டேன். கீழே கிடந்த கல் அவரது நெற்றியில்பட்டு உயிரிழந்துள்ளார். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது, என் நண்பரை நான் கொலை செய்யும் நோக்கத்தில் தள்ளவில்லை. இது எதிர்பாராமல் நடந்து விட்டது என்று கூறி போலீசாரிடம் அழுதுள்ளார் தினேஷ் பாபு. எப்படி இருந்தாலும் யுவராஜின் மரணம் சட்டப்படி கொலை வழக்காகி அவரது நண்பரே சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் மது போதை சிறுவர்களை சீரழித்து, அவர்களது வாழ்க்கையே திசை மாறி இழுத்துச் சென்றதுதான். இது சம்பந்தமாக மரக்காணம் போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.