கன்னியாகுமரி புதிய பேருந்து நிலையம் முன்பு தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில், பிரபலமான தங்கும் விடுதி ஒன்றில், 2 காதல் ஜோடிகள் நள்ளிரவு நேரத்தில் அறை எடுத்துத் தங்க வந்திருக்கின்றனர். 2 காதல் ஜோடிகளில் ஒரு ஜோடியில் காதலர் ஒருவருர் மட்டும் 22 வயதான இளைஞராக இருந்துள்ளார். ஆனால், அவருடைய காதலி 17 வயதான சிறுமியாக இருந்துள்ளார். மற்றொரு ஜோடியில் காதலி காதலன் இருவருமே 17 வயதான சிறார்களாக இருந்துள்ளனர். இதையறிந்த, தனியார் தங்கும் விடுதி நிர்வாகம் காதல் ஜோடிகளில் 22 வயதான இளைஞரின் ஆதார் கார்டை வைத்து அறை ஒன்றை ஒதுக்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஒரே அறையில் 2 காதல் ஜோடிகளும் தங்கியிருந்த நிலையில், அதிகாலை நேரத்தில் கன்னியாகுமரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி தலைமையிலான போலீசார் தனியார் விடுதியில் அதிரடி ரெய்டு அடித்தனர். கன்னியாகுமரி போலீசாரின் இந்த அதிரடி சோதனையில், ஒரே அறையில் 2 காதல் ஜோடிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காதல் ஜோடிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஒரே அறையில் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 17 வயதுடைய ஒரு சிறுவனுடன் 22 வயதுடைய ஒரு இளைஞர் தங்கியிருந்தது தெரியவந்தது.
இதில், சிறார்களுக்கு பாலியல் அத்துமீறலும் நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவர, போலீசார் சம்பந்தப்பட்ட விடுதியின் உரிமையாளர், மேலாளரை அழைத்துச் சென்று கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மறுபுறம், சிறார்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், 22 வயதான சட்டக் கல்லூரியில் படிக்கும் சந்தீஸ்குமார் என்ற வாலிபர் பெயரில் அறை எடுத்து காதல் ஜோடிகள் தங்கியது தெரியவந்தது.
இதையடுத்து, சிறார்கள் என்று தெரிந்தும் ஒரே அறையில் தங்க வைத்து பாலியல் அத்துமீறலுக்கு வழிவகை செய்ததாகத் தனியார் விடுதி உரிமையாளரான 61 வயதான பால்ராஜ், 54 வயதான மேலாளர் சிவன் மற்றும் சிறார்களைத் தவறாக வழி நடத்தி அறை எடுத்து அத்துமீறிய சட்டக் கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமி மற்றும் சிறுவனை மீட்ட போலீசார், அவர்களது பெற்றோர்களுக்குத் தகவல் கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கன்னியாகுமரியில் சிறுவர், சிறுமிகளை ஒரே அறையில் தங்க வைத்து பாலியல் அத்துமீறலுக்கு வழிவகை செய்த தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் உட்பட 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.