புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பாண்டிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் அஜித்(23). கணினி பொறியாளரான இவர் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறை காரணமாக நேற்று முன்தினம்(11.9.2024) தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் அவரது கழுத்துப் பகுதியில் பாம்பு கடித்ததுள்ளது.
இதையடுத்து உடனடியாக அறந்தாங்கி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில் அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், “பணி மருத்துவர் உரிய சிகிச்சை அளிக்காததால்தான் அஜித் உயிரிழந்தார். இதே போல இந்த பணி மருத்துவர் நோயாளிகளைச் சரிவரக் கவனிப்பதில்லை. நேற்று மதியம் வந்த அவசர கேசைக் கூட பணி மருத்துவர் பார்க்கவில்லை. தொடர்ந்து பணியில் மெத்தனமான இருந்து ஏழை மக்களின் உயிரோடு விளையாடும் பணி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அஜித் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறி காலை 9 மணி முதல் 3 மணி நேரத்தைக் கடந்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாலை மறியல் தொடர்வதையடுத்து அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக்குமார், வட்டாட்சியர் திருநாவுக்கரசு, டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் தலைமை மருத்துவர் சேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.