அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ளது முன்னூரான்காடுவெட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பட்டுசாமி-கம்சலை தம்பதியரின் 19 வயது மகன் அழகேசன். இவரது தாய் தந்தை இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். அதன் பிறகு, தாய் தந்தையை இழந்த அழகேசனை அவரது பெரியம்மா கௌசல்யா தனது வீட்டிற்கு அழைத்து வந்து தன் பிள்ளையைப்போல வளர்த்து பி.இ. சிவில் படிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அழகேசன் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதலுக்கு பலத்த எதிர்ப்பு இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை அதே பகுதியில் உள்ள ஆசனேரி தண்ணீரில் அழகேசன் பிணமாக மிதந்துள்ளார். இந்தத் தகவலை அறிந்த அவரது உறவினர்கள், ஊர்மக்கள் அழகேசன் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். அதே போல் அழகேசன் காதலித்த அதே பெண்ணை மற்றொரு வாலிபர் காதலித்து வந்தததால் அவர்தான் அழகேசனை கொலை செய்திருக்கலாம் எனக் கூறியுள்ளனர். இருவருக்கு இடையே காதல் மோதல் இருந்ததால் அவரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம். எனவே இந்தக் கொலைக்கு காரணமான அந்த இளைஞரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கோரி விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலையில் அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலை கதிரவன், ஆண்டிமடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதோடு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் அழகேசன் காதலித்த பெண்ணை போட்டி போட்டு காதலித்த மற்றொரு இளைஞரைக் கைது செய்தால்தான் மறியலைக் கைவிடுவோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் சந்தேகத்தின் பெயரில் அந்த இளைஞரைக் கைது செய்ய முடியாது எனத் தெரிவித்தனர்.
அதே போல் இறந்துபோன அழகேசனின் பிரேதப் பரிசோதனையின் அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தவறுதலாக தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்தாரா என்பது தெரியவரும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சாலை மறியலைக் கைவிட வேண்டும் இல்லையேல் உங்கள் அனைவரையும் கைது செய்வோம் என்று காவல்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து அழகேசனின் உறவினர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.