மயிலாடுதுறையில் முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி கண்ணன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மயிலாடுதுறை நகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் வன்னியர் சங்க நகரச் செயலாளராக இருந்தவர். அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் தலையிடுவதோடு, சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்தும் தொழில் செய்துவருகிறார். இவருக்கும் மயிலாடுதுறை நகரத்தில் உள்ள கலைஞர் காலனியைச் சேர்ந்த மின்வாரிய தொழிலாளி கதிரவன் என்பவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் கண்ணன், கதிரவனை தாக்கியிருக்கிறார். இது கதிரவனுக்கு அவமானமாக இருந்துள்ளது. இதனால், அவர் கண்ணன் மீது கடும் கோபத்தில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கண்ணன் மீது ஏற்கனவே பல்வேறு அடிதடி வழக்குகள் இருந்ததால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையில் இருந்துவந்தார்.
இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு விடுதலையாகி ஊருக்கு வந்த கண்ணன், வழக்கம்போல் பழைய பானியிலேயே உலாவந்துள்ளார். இந்தசூழலில் நேற்று இரவு நல்லதூக்குடி ரஞ்சித், டபீர் தெரு திவாகர் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் உலா வந்திருக்கிறார். பின்பு வீட்டுக்கு திரும்பும்போது புதிய பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்த கலைஞர் காலனியைச் சேர்ந்த அஜீத், திவாகர், கதிரவன் மற்றும் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கண்ணனைத் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்து ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை அறிந்த கண்ணனுடன் வந்த ரஞ்சித் மற்றும் திவாகர் தப்பி ஓடி உள்ளனர். அதன்பிறகு அந்தக் கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்த கண்ணனை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.
தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்ப இடத்திற்குச் சென்று கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியதோடு, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி அதனை ஆதாரமாக கொண்டு வழக்குப் பதிவு செய்ததோடு அஜித், திவாகர், கதிரவன் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய கும்பளைத் தேடி வருகின்றனர். அதோடு கொலை நடந்த போது கண்ணனுடன் வந்த டபீர் தெரு திவாகரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மயிலாடுதுறை நகரம் முழுவதும் பரபரப்பாகியுள்ளது. நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு வன்முறை ஏதும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.