கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் அபிசுந்தர் (வயது 17). இவர் கடந்த மார்ச் 9- ஆம் தேதி அன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. அவரை தேடியதில் பகல் 11:00 மணியளவில் அப்பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் அபிசுந்தர் உடல் சடலமாக மீட்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர்.
அதேசமயம், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது அப்பா பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதனிடையே, இறந்த அபிசுந்தரின் உறவினர்கள் மற்றும் பூலாம்பாடி கிராம மக்கள் அபிசுந்தரைக் கொலை செய்ததாகக் கூறியும், கொலை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், நேற்று முன்தினம் (10/03/2022) வேப்பூர் பேருந்து நிலையம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் சாலை மறியல் நடைபெற்றதால், காவல்துறையினர் கிராம மக்களை வலுக்கட்டாயமாக சாலையிலிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் கிராம மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.
அதனை தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி. அசோக்குமார், விருத்தாசலம் ஆர்.டி.ஓ. ராம்குமார் ஆகியோர் கிராம மக்களை சமரசம் செய்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்நிலையில் இக்கொலை வழக்கு தொடர்பாக, வேப்பூரில் முகாமிட்டு விசாரணையை முடுக்கிவிட்ட ஏ.எஸ்.பி அசோக்குமார், மார்ச் 10- ஆம் தேதி 5 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர், அப்போது கொலை நடந்ததை 17 வயது சிறுவன் ராமர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மார்ச் 11- ஆம் தேதி காவல்துறையினர் சந்தேக வழக்காக பதிவு செய்ததை, கொலை வழக்காக மாற்றி வழக்குபதிவு செய்தனர்.
அதன்படி, பூலாம்பாடி கிராமத்தில் அபிசுந்தர் குடும்பத்தாருடன் முன் விரோதம் கொண்ட பெரியசாமி மகன் இளையராஜா, பூலாம்பாடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாதுரை ஆகியோரின் தூண்டுதல் பேரில் இளையராஜாவின் சின்ன அக்கா கணவர் நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் பாண்டியன் (வயது 33), சின்ன அக்கா மணிமேகலை பாண்டியன் (வயது 31), பெரிய அக்காவான நிதிநத்தம் முருகராஜ் மனைவி பெரியம்மாள் (வயது 36), பெரிய அக்கா மகன் ராமர் (வயது 17) ஆகிய நான்கு பேரும் அபிசுந்தரைக் கழுத்தை நெறித்து, மூக்கு, தாடை பகுதியில் குத்தியதில் சுய நினைவு இழந்த அபிசுந்தரை கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்ததாகக் கூறியதையடுத்து, அவர்கள் நான்கு போரையும், அவர்களுக்கு தூண்டுதலாக இருந்த இளையராஜா, அண்ணாதுரை இருவர் என ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.