சேலம் சீலநாயக்கன்பட்டி என்பிஆர் பள்ளி அருகே, கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த லாரியில் ஓட்டுநர் இருக்கை அருகே வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிகான் கேமரா ஆகியவற்றை மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
அதேபோல், தாதகாப்பட்டியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஒரு டிவி, 1,500 ரூபாய் ரொக்கம் ஆகியவையும் திருட்டுப் போனது. அதே ஆண்டு டிசம்பர் மாதம், சண்முகா நகரில் ஒரு வீட்டிலும் எல்இடி டிவி, வெள்ளி மெட்டி, காமாட்சி குத்துவிளக்கு ஆகியவை திருட்டுப் போனது.
விசாரணையில், இந்த சம்பவங்களில் ஈடுபட்டது சேலம் சீலநாயக்கன்பட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் மணிகண்டன் (வயது 25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மணிகண்டன், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.
அதன்பேரில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் கைது ஆணை நேரில் வழங்கப்பட்டது.