Skip to main content

கோயிலுக்கு நடை பயணம் சென்றவர் வழிமறித்து கொலை

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

youngster passed away in viluppuram

 

சென்னை பாடியநல்லூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் அபிஷேக்(20). இவர், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணி அன்னை மாதா கோவிலுக்கு சென்னையிலிருந்து நடை பயணமாக புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அவருடன் மேலும் 10 பேர் நடை பயணத்தில் மாதா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். 

 

நேற்று காலை சுமார் 8:30 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை காலை பகுதியில் நடைபயணம் சென்று கொண்டிருந்த அபிஷேக்கை இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அபிஷேக்கின் நிலையைக் கண்டு கூட வந்தவர்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அபிஷேக்கை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

 

தகவல் அறிந்த கோட்டுக்குப்பம் ஏ.எஸ்.பி மித்ரன், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி உள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் யார் எதற்காக அபிஷேக்கை கொலை செய்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தியதோடு அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் கொலையாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.  இந்த கொலை முன் விரோதம் காரணமாக நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட அபிஷேக் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதன் முன் விரோதம் காரணமாக அபிஷேக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்