Skip to main content

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி; உயிரோடு எரித்துக் கொன்ற காதலன்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

young man passed away his girlfriend alive in Tirupur

 

19 வயது இளம்பெண்ணான கங்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கங்காவின் தாய், தந்தை இறந்துவிட திருப்பூர் ராயர்பாளையத்தைச் சேர்ந்த தனது தாய் மாமா இப்ராகிம் சாகரின் பாதுகாப்பில் வளர்ந்துள்ளார். மேலும், தனது அக்காவுடன் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு லோகேஷ் என்ற 22 வயது இளைஞரிடம் கங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இவர்கள் இருவரும், யாருக்கும் தெரியாமல் தனிமையில் சந்தித்துப் பழகி வந்தனர். நாளடைவில் இவர்களின் காதல் விவகாரம் கங்காவின் வீட்டிற்குத் தெரிய வந்தவுடன் மூன்று மாதத்திற்கு முன்பு லோகேஷை வீட்டிற்கு அழைத்து கண்டித்துள்ளனர். அப்போது அங்கிருந்த கங்கா, ''நீ என்னை என்ன பண்ணுனேன்னு சொல்லு... இப்ப நீ சொல்றியா... இல்ல நா சொல்லட்டுமா எனக் கேட்டுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த லோகேஷ், இனிமேல் அப்படி செய்யமாட்டேன் என அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

இதனால், மனம் இறங்கிய கங்கா குடும்பத்தார், "அவ சின்ன பொண்ணு... நீயும் சின்ன பையன்தான்... இனிமே நீங்க ரெண்டு பேரும் பேசக்கூடாது" என சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, வேலைக்குச் செல்லாமல் இருந்து கடந்த 4 நாட்களாகத் தான் வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 3ஆம் தேதியன்று பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் லோகேஷும் கங்காவும் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது லோகேஷ், கங்காவிடம் தவறாக நடந்துகொண்ட பிறகு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கங்கா வற்புறுத்தியுள்ளார்.

 

இதனால், விரக்தியடைந்த லோகேஷ் கீழே கிடந்த கல்லை எடுத்து கங்காவின் தலையில் அடித்ததோடு தனது பெல்ட்டில் இருந்த பக்கில்ஸால் தொடைப் பகுதியைக் காயப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், லோகேஷ் மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த பெட்ரோலை கங்கா மீது ஊற்றிவிட்டு இதோடு நீ செத்து தொலைடி என வேகமாக கத்திவிட்டு, அந்தப் பெண்ணை உயிரோடு கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். அப்போது, கீழே விழுந்து லோகேஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலில் தீக்காயங்களுடன் இருந்த கங்காவை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கங்கா கடந்த 4ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும், விபத்தில் காயமடைந்த லோகேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இதுகுறித்து, கங்காவின் அத்தை உஷா நம்மிடம் பேசும்போது, "எங்க பாப்பாவுக்கு ஆதார் கார்டு கூட இல்ல. அவள எரிச்ச இடத்துல போதைப் பொருள் இருந்துச்சின்னு போலீஸ் சொல்றாங்க. அந்தப் பையன சும்மா விடக்கூடாது. எங்க குழந்தைய ஏமாத்தி கொன்னுட்டான். அவன தூக்குல போடணும்" என கண்ணீரோடு பேச்சை முடித்துக்கொண்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்