புதுகையில் கைதான வாலிபர்,
மாணவர் சங்கத் தோழர்கள் விடுதலை;உற்சாக வரவேற்பு
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தியதற்காக புதுக்கோட்டையில் கைதுசெய்யப்பட்ட வாலிபர், மாணவர் சங்கத் தோழர்கள் 16 பேரும் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் விடுதலை செய்யப்பட்டனர்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்தப் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கடந்த செப். 9 அன்று நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி வாலிபர், மாணவர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மனுக்கொடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தினால் சட்டம் ஒழுங்கை சீர்குழைத்ததாகக் கூறி. வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.பன்னீர்செல்வம், செயலாளர் துரை.நாராயணன், துணைத் தலைவர்கள் என்.தமிழரசன், ஆர்.சோலையப்பன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி, தலைவர் குமரவேல் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு பல்வேறு வழக்குகளில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர்.
இதில், புதுக்கோட்டையில் அடைக்கப்பட்ட 13 பேர் கடந்த வெள்ளிக்கிழமையும், தஞ்சாவூர் சிரார் சிறையில் அடைக்கப்பட்ட 3 பேர் சனிக்கிழமையன்றும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டவர்களை சிறைச்சாலைக்கே சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்ட உணவ உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முக பழனியப்பன், அரசுப் போக்கவரத்து தொழிற்சங்கப் பொதுச் செயலாளர்கள் எம்.வேலுச்சாமி(தொமுச), ச.பாலசுப்பிரமணயின்(சிஐடியு), சிபிஎம் ஒன்றிய, நகரச் செயலளர்கள் சி.அன்புமணவாளன், த.அன்பழகன், எம்.ஆர்.சுப்பையா, லட்சாதிபதி உள்ளிட்டோர் வரவேற்று வாழ்த்தினர்.
விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறைச்சாலை வாயிலில் இருந்து நீட் தேர்வை ரத்துசெய்ய வலியறுத்தி புதுக்கோட்டை நகர வீதிகளில் முழக்கங்களை எழுப்பியவாறு வலம் வந்தனர். நீட் தேர்வை ரத்துசெய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் எனவும் விடுதலையானவர்கள் தெரிவித்தனர்.
- பகத்சிங்