கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள இறையூரைச் சேர்ந்தவர் சாமுவேல் என்பவரது மகன் ஜான் மில்கி யூர் (30). இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இதனால், இவர் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இதையடுத்து, இவர் இனிமேல் குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்த்தினியிடம் எழுத்துமூலம் உறுதிமொழி அளித்தார். இதனால், இவர் ஜாமினில் வெளியே விடப்பட்டார்.
ஆனால், அப்படி வெளியே வந்த பிறகு திருந்தி வாழாமல் மீண்டும் இவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டாட்சியர் சாய்வர்த்தினிக்கு, எலவாசனூர் கோட்டை போலீசார் எழுத்துமூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணைசெய்த கோட்டாட்சியர் சாய்வர்த்தினி ஜான் மில்கி யூர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததை உறுதிசெய்தார்.
இதனால், அவரை ஓர் ஆண்டு சிறையில் அடைக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து எலவாசனூர் கோட்டை போலீசார் ஜான் மில்கி யூரை கைதுசெய்து கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். மனம் திருந்தி வாழ்வதாக உறுதியளித்த இளைஞர் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டு சிறை சென்றுள்ள சம்பவம் இறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.