திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டுகெதரில் வாழும் ஆணோ பெண்ணோ தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் இடையார்பாளையத்தை சேர்ந்த ஜோசப் பேபி என்பவருடன் கலைச்செல்வி என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்த நிலையில் கணவர் ஜோசப் பேபி கடந்த 2016 ஆம் முதல் கருத்துவேறுபாடு காரணமாகத் தனியாக வாழ்ந்து வருவதாகவும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கோவை நீதிமன்றத்தில் கலைச்செல்வி வழக்குத் தொடுத்திருந்தார். ஆனால் இந்த வழக்கின் விசாரணையில் தான் கலைச்செல்வியைத் தான் திருமணம் செய்துகொள்ளவில்லை என ஜோசப் தரப்பு தெரிவிக்க வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து கலைச்செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், விஜயகுமார் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்பொழுது நடந்த விசாரணையில் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்துவந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பணப்பிரச்சனை காரணமாக கலைச்செல்வி வழக்கு தொடர்ந்துள்ளாரே தவிர மீண்டும் இணைந்து வாழும் எண்ணத்துடன் வழக்கு தொடர்ந்ததாகத் தெரியவில்லை என மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.
மேலும், திருமணம் செய்யாமல் வாழ்பவர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைக்கு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க சட்டபூர்வ உரிமை இல்லை எனத் தெளிவுபடுத்தினர்.