முதலமைச்சரே கண்டுகொள்ளாத அமைச்சர் சரோஜா லஞ்சம் கேட்ட விவகாரம்!
பணியிட மாற்றத்திற்கு லஞ்சம் கேட்டதாக தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் வழக்கு ஜனவரி 4ஆம் தேதி விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ராஜ மீனாட்சி. இவர் தனது பணியை நிரந்தரம் செய்வதற்கும், பணிமாற்றம் செய்வதற்கும் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக அமைச்சர் சரோஜா மீது சென்னை காவல் ஆணையரகத்தில் ராஜமீனாட்சி புகார் அளித்தார். இதையடுத்து அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாமல் செப்டம்பர் 21ஆம் தேதி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து தமிழக சமூக நலத்துறை செயலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை இயக்குநரிடம் புகார் அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், தன்னை பணியிலிருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பணி நீட்டிப்பு வழங்க லஞ்சம் கேட்டும், வீட்டிற்கு அழைத்தும் துன்புறுத்தியதாகவும், குழந்தைகள் நல பாதுகாப்பு திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படாமல் நிறுத்தப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ட்டி.ராஜா முன் நிலுவையில் உள்ள நிலையில், உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிடப்பட்டது. இதனையேற்ற நீதிபதி ஜனவரி 4ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
- சி.ஜீவா பாரதி