பள்ளிகளில், பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் ‘மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு’ அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். இந்த குழு ஒவ்வொரு மாதமும், கூடி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் குறித்து 14417 மற்றும் 1098 என்ற கட்டணமில்லா எண்கள் தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு மாணவ மாணவிகள் புகார் அளிக்கலாம்.
இந்த தொலைப்பேசி எண்கள் ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் பின்பக்க அட்டையில் அச்சிடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளியிலும், ‘மாணவர் மனசு’ என்ற புகார் பெட்டி வைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் போக்சோ சட்டம் குறித்து மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவினை ஏற்படுத்த வேண்டும். என்.எஸ்.எஸ்., என்.சி.சி., விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவற்றிற்கு மாணவ மாணவிகளை வெளியே அழைத்துச் செல்லும்போது, பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற வேண்டும். மாவட்ட கல்வி அலுவலரின் முன் அனுமதியின்றி மாணவ மாணவிகளைப் பள்ளியை விட்டு வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.
மாணவ மாணவிகளை வெளியே அழைத்துச் செல்லும்போது ஆசிரியர்களும் உடன் செல்ல வேண்டும். அதன்படி வெளியே செல்லும்போது பத்து மாணவர்களுக்கு ஒரு ஆண் ஆசிரியர், 10 மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியருடன் செல்ல வேண்டும். ஆசிரியர்கள் ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொண்டால் குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும். அதோடு துறை ரீதியான கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை எடுத்துள்ளது. முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவிகளை விளையாட்டுப் போட்டிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் அழைத்துச் சென்று, மாணவிகளுக்கு மதுவைக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.