உலகமே கரோனா பீதியில் ஒவ்வொரு கணமும் தவிக்க, சூழலை உணராத வாலிபர் ஒருவர் டிக்டாக்கில் கெத்துக் காட்ட, அந்த வாலிபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம் நகரின் பக்கமுள்ள ஆவடையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி(21) பிளஸ்2 முடித்துள்ள இவர் சென்னையிலிருக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் வேலையிலிருப்பவர். தற்போது கரோனா லாக்டவுண் காரணமாக ஒரு வழியாக கிராமம் திரும்பியிருக்கிறார்.
நேற்று முன்தினம் ஆவுடையாபுரத்திலுள்ள ஒரு சமுதாயத் தலைவரின் கட்அவுட் முன்னே நின்று கொண்டு அவதூறாகப் பேசியவாறு அதனை டிக்டாக் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்களில் உலாவ விட்டுக் கெத்துக் காட்டியிருக்கிறார். இதன் காரணமாக அது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இருவேறு சமுதாயத்திற்கிடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் விதமாகத் திருவேங்கடம் கிராம வி.ஏ.ஓ,மாரிச்சாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவேங்கடம் காவல் நிலைய எஸ்.ஐ. சத்தியவேந்தன் வழக்குப் பதிவு செய்து வீரமணியைக் கைது செய்தார் பின்னர் அவர் கோர்ட் ரிமாண்ட் படி சங்கரன்கோவில் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.