திருவாரூரில் திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் 50 சதவீத மக்கள் கலந்துகொள்ளும் அளவிற்காவது கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என தமிழக வாடகை பொருட்கள் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதிச் சடங்கில் 50 நபர்களுக்கு மிகாமலும் மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக வாடகை பொருட்கள் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர் சங்கத்தினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் “கடந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில் முற்றிலும் நலிந்தது. அந்த தொழிலை நம்பியிருந்த குடும்பங்கள் அனைத்தும் வீதிக்கு வந்துவிட்டது. ஆண்டில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே திருவிழாக்களும் சுபநிகழ்சிகளும் அதிகப்படியாக நடைபெறும். சுபநிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் சாமியானா அமைப்பது, ஒலி - ஒளி அமைப்பது, வாடகை பொருட்கள் வழங்குவது போன்றவற்றிற்காக, 50 சதவீத பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையிலாவது கட்டுப்பாடுகளை தளர்த்தி தங்களது வாழ்வாதாரம் மேம்பட உதவிட வேண்டும்” என கூறியிருந்தனர்.