கரோனா தடுப்பு ஊரடங்கு காலத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதியில் இருந்து சிறு, குறு தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களுக்கு வெளியில் உள்ள தொழிற்சாலைகளை 50 சதவீத தொழிலாளர்களோடு இயக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதில் தொழிலாளர்களுக்கு முக கவசங்கள் வழங்கி, போதிய இடைவெளி விட்டு, கை கழுவுவதற்கான சோப்பு மற்றும் சானிடைசர் ஆகியவற்றை வழங்கி, வேலையில் ஈடுபடுத்த வேண்டும் என்று அரசு நிபந்தனைகள் விதித்துள்ளது.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி. யின் ஈரோடு மாவட்ட தலைவர் சின்னுசாமி மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் பத்து வேண்டுகோள்களை முன்வைத்துள்ளார். இது பற்றி கூறிய சின்னுசாமி,
ஈரோடு மாவட்டத்திலும் தொழிற்சாலைகளை இயக்குவது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. குறிப்பாக, பெருந்துறை சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளை 20-ஆம் தேதி முதல் இயக்குவது குறித்து 17-4-2020 ந் தேதி பெருந்துறையில் ஈரோடு கோட்டாட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. எனவே தொழிற்சாலைகளை இயக்குவது சம்பந்தமாக சில கோரிக்கைகளை எங்கள் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கும், அரசு நிர்வாகத்திற்கும் கவனத்தில் கொண்டு வர விரும்புகிறோம். அதில்,
1.தொழிற்சாலைகளில் வேலை அளிக்கும்போது, சரிபாதி தொழிலாளர்களுக்கு முதல் நாளும், மறுபாதி தொழிலாளர்களுக்கு இரண்டாம் நாளும், முதல் நாளில் வேலை செய்தவர்களுக்கு மூன்றாம் நாளும் ஆக சுழற்சி முறையில் வேலை அளிக்க வேண்டும். இதேபோல் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டாலும் சுழற்சி முறையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
2.தொழிலாளர்களின் சீனியாரிட்டி வரிசைக் கிரமத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அனுமதித்து, பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் வேலை கிடைக்கச் செய்ய வேண்டும்.
3.சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பணிபுரிந்தாலும், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பணிபுரிந்தாலும் மாதம் முழுமைக்குமான சம்பளம் அனைத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
4. எலக்ட்ரீசியன், பாய்லர் அட்டெண்டன்ட் போன்ற தினமும் தொடர்ச்சியாக வேலைக்கு தேவைப்படக்கூடிய கேட்டகிரியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, 50 சதவீதம் கூடுதல் சம்பளத்தை சிறப்பு ஊதியமாக வழங்க வேண்டும்.
5. பொது போக்குவரத்து இல்லாத சூழ்நிலையில் வேலை அளிப்பவர்களே, தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதியை செய்து தர வேண்டும். அல்லது சொந்த வாகனங்கள் மூலம் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தால், அந்த போக்குவரத்து செலவை நிர்வாகமே ஏற்க வேண்டும்.
6.வாகனங்களில் வெளியே வரும்போது காவல்துறையினர், பதிலை எதிர்பாராமலே அடிக்கிற, தண்டனை வழங்குகிற, வாகனங்களை கையகப்படுத்துகிற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகவே வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு உரிய அடையாள அட்டைகள் வழங்குவதோடு, அவர்களை பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் காவல்துறைக்கும் வழங்கப்பட வேண்டும்.
7.வழக்கமான குறைகளைக் களைகிற அமைப்பு, இப்போதுள்ள புதிய சூழலுக்கு பொருத்தமானது அல்ல என்பதால், தொழிற்சாலைக்கு உள்ளும் வெளியிலும் ஆன நிபந்தனைகள் குறித்து தொழிலாளர்கள் தமது குறைகளைத் தெரிவிப்பதற்கும், உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும், மாவட்ட ஆட்சியரகத்தில் இதற்கென்று ஒரு தனிக் குழு அமைக்கப்பட வேண்டும். அதற்கான தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பகிரங்கமாக செய்தித்தாள்கள் வழியாக வெளியிட வேண்டும்.
8.அரசு அறிவிப்பின்படி முக கவசம், சானிடைசர் வழங்கி போதிய இடைவெளியில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்களா என்பதை நேரடியாகக் கண்காணிக்க மாவட்ட வருவாய்த்துறை மற்றும் தொழிலாளர் துறை இணைந்த குழுக்களை அமைத்து, அவை தினந்தோறும் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்புவதற்கு வகை செய்யவேண்டும்.
9. ஊரடங்கு காலத்திற்கு நிரந்தர, கேஷுவல், காண்ட்ராக்ட் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முழுமையாக சம்பளம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசும், மாநில அரசும் உத்தரவிட்டும்கூட இதுவரை மிகப் பெரும்பான்மையான முதலாளிகள் அந்த சம்பளத்தை வழங்கவில்லை. தற்போது பணியை துவங்கும் நிறுவனங்கள் உடனடியாக அந்த சம்பள நிலுவையை வழங்குவதை அரசு உறுதி செய்யவேண்டும்.
10.சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எந்த விதமான நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்ற உறுதிமொழியை பெற்ற பின்னரே தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அதனை உத்தரவாதப்படுத்தும் வகையில் மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
இதுவரை இல்லாத ஒரு புதிய சூழலில் மீண்டும் உற்பத்தி துவங்குகையில், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், வேலை அளிப்பவர்கள் தம் பொறுப்பை உணர்ந்து, சட்டவிதிகள் மற்றும் அரசு ஆணைகளை மீறாமல் சேர்ந்து செயல்படுவதும் அதனை அரசாங்கம் விழிப்போடு இருந்து ஒழுங்குபடுத்துவதும் அவசியமானவை ஆகும்.
ஆகவே, தாங்கள் தயவு செய்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் வைக்கப்பட்டுள்ள மேற் சொன்ன ஆலோசனைகளை பரிசீலித்து, முழுமையாக அமல்படுத்த தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்." என கூறியுள்ளார்.