பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கரையைக் கடக்க துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அண்மையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையை அருகில் கண்டுகளிக்க மெரினா கடற்கரையில் சிறப்பாக உருவாக்கப்பட்ட நடைமேடை நேற்று கடல் அலை சீற்றத்தால் சேதமடைந்தது. மேலும், நேற்று நள்ளிரவு வீசிய பலத்த காற்று காரணமாக அந்தப் பாதை முழுவதும் மணலால் மூடப்பட்டது. அந்தச் சிறப்புப் பாதை மட்டுமல்லாமல் மெரினா கடற்கரையில் உள்ள கடைகள் உள்ளிட்டவையும் கடல் நீர் உட்புகுந்ததால் சேதமடைந்தது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதையைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.