Skip to main content

“டாஸ்மாக் கடையை மூடு; இல்லையேல் விஷம் குடிப்போம்” - பெண்கள் போராட்டம்

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

  Women's struggle Close the Tasmac shop

 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகில் உள்ள கடலி கிராமம் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடையினால் அப்பகுதி வழியாக விவசாய வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ மாணவிகள் என பலரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.  

 

இந்த நிலையில், அந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடையின் முன் திரண்டு கடையை திறக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மண்ணெண்ணெய் மற்றும் விஷ மருந்தை கையில் வைத்துக் கொண்டு, ‘டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும். இல்லையேல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம்’  என்று கடை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

 

பெண்களின் போராட்டம் குறித்து அறிந்த வட்டாட்சியர் அலெக்சாண்டர், வளத்தி காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் அக்டோபர் 1ஆம் தேதி வரை அதிகாரிகளிடம் பேசி கடை மூடுவதற்கு கால அவகாசம் தருமாறு கேட்டனர். மக்கள், கடை நிச்சயம் இங்கு இருக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் தங்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்