பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் முறைப்படி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தகுதியுள்ள மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. அதே சமயம் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் உரிமைத்தொகை திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி விண்ணப்பிக்கத் தவறியவர்களும் தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், அதற்கு முதல் நாளான 14 ஆம் தேதியான சனிக்கிழமையே வரவு வைக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசின் அறிவிப்பின்படி இரண்டாவது மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை இன்று வரவு வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி மகளிரின் வங்கிக் கணக்கிற்கு உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாள் முன்னதாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.