விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகில் ஓடுகிறது மலட்டாறு. மிக அதிக அளவில் மழை பெய்து பெண்ணையாற்றில் வரும் உபரி தண்ணீர் இந்த மலட்டாறில் எப்போதாவது செல்லும். மற்ற காலங்களில் இந்தப் பகுதி காடுகள்போல செடிகள், கருவேல முட்செடிகள் வளர்ந்து மண்டிக்கிடக்கும். இதைப் பயன்படுத்திக்கொண்டு அப்பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் உண்டு. அவ்வாறு இருக்கிற சூழ்நிலையில், மலட்டாறு பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.
ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் இதைப் பார்த்துவிட்டு திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பழனி, டி.எஸ்.பி பழனிச்சாமி உள்ளிட்ட போலீசார் மலட்டாறு பகுதிக்குச் சென்று, எரிந்த நிலையில் கிடந்த அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். எரிக்கப்பட்ட பெண்ணின் உடல் அருகில் அவர் அணிந்திருந்த மெட்டி, தலைவாறும் சீப்பு, பாதி எரிந்த நிலையில் செருப்பு, ரத்தக்கரை படிந்த மரக்கட்டை, அவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடத்தில் கிடந்துள்ளன. அந்தப் பெண்ணின் மர்ம மரணம் பலவித சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், எரிந்தும் எரியாத நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? வனம் சூழ்ந்த மர்மமான இந்தப் பகுதிக்கு அவர் வர வேண்டிய அவசியம் என்ன? அவரை யாராவது கடத்தி வந்து பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளனரா? அல்லது தகாத காதல் பிரச்சனையில் கொலை செய்யப்பட்டாரா? கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மலட்டாறு பகுதியில் அவ்வப்போது இதுபோன்று சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அப்படி யாரோ திட்டமிட்டு இந்தப் பெண்ணைக் கொண்டுவந்து கொலை செய்து எரித்துப் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர். இந்த சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.