அண்மைக்காலமாகவே பள்ளி சிறார்கள், கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்துகளில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூகவலைதளங்களில் கண்டனத்தைப் பெற்றுவருகின்றன. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பள்ளி சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி அவ்வப்போது பேரதிர்ச்சியை தருகிறது.
இப்படி இருக்க, பள்ளி சிறுவன் ஒருவன் பள்ளி சீருடையுடன் தெருவில் கேஷுவலாக புகைப்பிடித்துச் செல்ல, அதனைக் கண்ட பெண்மணி ஒருவர் அந்தப் பள்ளி மாணவனைப் பிடித்து லெஃப்ட் ரைட் வாங்கும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்தக் காட்சியில் மாணவன் பள்ளி சீருடையுடன் சிகரெட் புகைப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த பெண்மணி, அந்த மாணவனை சட்டையோடு பிடித்து, ''உன்ன உன் அம்மா அப்பா எல்லாம் கஷ்டப்பட்டு வளர்க்குறாங்க... இப்படி ரோட்ல சாதாரணமா புகைப்பிடிக்கிறனா இந்தப் பழக்கம் உனக்கு இப்போ இருந்திருக்காது... ஆரம்பத்திலேயே இருந்திருக்கும்... படிக்கப் போற இடத்திற்கு இப்படித்தான் தம் அடிச்சிட்டு போவியா... ரோட்ல பெரியவங்க எல்லாம் போறாங்கன்னு கொஞ்சம் கூட பயம் இல்லாம போற.. இதனாலதான்டா கெட்டுப் போறீங்க...'' என சட்டையைப் பிடித்துக்கொண்டு சிறுவனை அடிக்கப் பாய்ந்தார்.
''உனக்கு மனசாட்சி இல்ல... என்னடா யூனிஃபார்ம் போட்டு சிகரெட் குடிக்குறோமே, யார்னா கேட்க மாட்டங்களானு... உன் அம்மா அப்பா ஃபோன் நம்பர் கொடு, இல்லன்னா போலீசில் ஒப்படைப்பேன்...'' என கடுமையாக எச்சரித்தார். ''இன்னைக்கு நீ சிகரெட் கேட்டால் நாளைக்கு கஞ்சா கேட்பயே நீ... உன் வீடு எங்க இருக்கு சொல்லு... உங்க அப்பா நம்பர் வேணும்... வீட்டோட முடிக்கவா இல்ல, ஸ்டேஷன்ல முடிக்கவா...” என எச்சரிக்க, அந்த மாணவன் ''அக்கா... அக்கா...'' என கெஞ்சினான். அதன்பின் எச்சரித்த அந்தப் பெண்மணி புத்திமதி சொல்லி அந்த மாணவனை அனுப்பிவைத்தார். சமூகவலைதளத்தில் வெளியான இந்த வீடியோ வைரலாக, அந்தப் பெண்மணிக்குப் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.