Skip to main content

பெண் மரணத்தில் சந்தேகம்: உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு பரிசோதனை

Published on 14/08/2017 | Edited on 14/08/2017
பெண் மரணத்தில் சந்தேகம்: உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு பரிசோதனை



நெல்லை மாவட்டத்தின் டக்கரம்மாள்புரத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது மனைவி நிர்மலா என்பவர் கடந்த 8ந் தேதி மரணமடைந்தார். அவரது உடல் செல்வக்குமார் சொந்த ஊரான கல்லத்திகிணற்றில் அடக்கம் செய்யப்பட்டது. நிர்மலா சாவில் சந்தேகம் இருப்பதால் அவரது தாய் மற்றும் உறவினர்கள் புகார் கொடுத்தன் அடிப்படையில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் நம்பிராஜ் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது.

நெல்லை டக்கமாள்புரம் மணிநகரைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (36). இவர் பாளையங்கோட்டை ராஜேந்திர நகரில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் மேலஇலந்தைக்குளம் எட்வார்டு என்பவரது மகள் நிர்மலாவிற்கும் (30) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. நிர்மலா தனியார் பள்ளியில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி நிர்மலா உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்தாக கூறி செல்வக்குமார் தனது சொந்த ஊரான தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கல்லத்திகிணற்றில் அடக்கம் செய்தார். இதற்கிடையில் தனது மகள் சாவில் மர்ம இருப்பதாகவும், செல்வக்குமார் தனது மகளை அடித்து கொலை செய்து புதைத்து விட்டதாக அவரது தாய் மற்றும் உறவினர்கள் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.

இந்நிலையில் கல்லத்திகிணற்றில் புதைக்கப்பட்ட அவரது உடல் ஓட்டப்பிடாரம் தாசில்தார் நம்பிராஜ் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவமனை மருத்துவர்கள் குழவினர் உடற்கூறு பரிசோதனை செய்தனர். முன்னதாக காலையில் 9மணிக்கு உடலை தோண்டி எடுத்து உடற்கூறு பரிசோதனை செய்வதற்காக காவல்துறையினர், மருத்துவக் குழுவினர் வந்த நிலையில் தாசில்தார் நம்பிராஜ், கைது செய்யப்பட்டுள்ள செல்வக்குமார் வந்தால் தான் உடலை தோண்டி எடுக்க முடியும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மாலையில் தாசில்தார் நம்பிராஜ் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. உடற்கூறு பரிசோதனை ஆய்வு முடிவு வந்த பின்பு நிர்மலா உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா இல்லை அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும்.

செய்தி :  படங்கள் : ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்