கூடங்குளம் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் - முகிலன்
நேற்று (19-12-17) பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து சூழலியல் போராளி முகிலன், கூடங்குளம் அணுமின் நிலைய போராட்ட வழக்குகளின் விசாரணைக்காக நெல்லை மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட போது முழக்கமிட்டார்.
மேலும், அவர் கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கேட்காமலேயே இந்த இந்திய அரசாங்கம் கப்பலையும் விமானத்தையும் அனுப்பியது. அது தாழ்வாக பறந்ததில் சகாயம் என்ற மீனவ தோழர் இறந்தார். ஆனால், இன்று ஓகி புயலில் காணாமல் போனவர்களை மீட்க அந்த விமானமும் கப்பலும் ஏன் வரவில்லை? இந்த இந்திய அரசு தொடர்ந்து தமிழர்களையும் தமிழகத்தையும் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. மீனவர் பிரிட்டோவை சுட்டுக் கொன்றது சிங்கள ராணுவம்தான். இதனை கேட்பதற்கு மத்திய மாநில அரசுகள் தயங்குவது ஏன்? என்று கேள்விகளை எழுப்பினார். கூடன்குளம் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று முழக்கமிட்டார்.
மேலும், என்னைக் கைதுசெய்து 3 மாதங்கள் கடந்தும் என் மீதான வழக்கு விபர கோப்புகளை கேட்டும் இன்னும் கொடுக்கவில்லை. இவ்வாறு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவின் பொறுப்பாளர்களில் ஒருவரும், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன் முழக்கம் எழுப்பினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- இரா.பகத்சிங்