Skip to main content

பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Published on 23/10/2017 | Edited on 23/10/2017
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (23-10-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

செய்தியாளர்: மோடி எங்கள் பக்கம் தான் இருக்கிறான், இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும் என அமைச்சர்கள் இப்போதே சொல்வதைப் பார்த்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடக்குமா என்ற சந்தேகம் வருகிறதே?

மு.க.ஸ்டாலின்: இதுபற்றி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், இன்று நான் எழுதிய கடிதத்திலும் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன். திமுக சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார். தேவைப்படுமானால் அதற்காக நீதிமன்றத்தை நாடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் ஏறக்குறைய 45,000 போலி வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, கடந்த தேர்தலில் திமுக சார்பில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இன்று திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களும், திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திரு. கிரிராஜன் அவர்களும் புகார் மனு அளித்திருக்கிறார்கள். அவர்களிடம், ‘டபுள் எண்ட்ரி’ ஆகியுள்ள அந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நிச்சயமாக நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் திரு. ராஜேஷ் லக்கானி அவர்கள் உறுதியளித்துள்ளார். அப்படி நீக்கவில்லை என்றால் அதற்காக நீதிமன்றத்தை நாடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

செய்தியாளர்:  நெல்லையில், கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்களே?

மு.க.ஸ்டாலின்: இந்த ‘குதிரை பேர’ ஆட்சியில் நிர்வாகம் மட்டுமல்ல சட்டம் – ஒழுங்கும் எந்தளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. நெல்லையில் உள்ள கடையநல்லூர் பகுதியில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கொடுமைக்குக் காரணமான கந்துவட்டி நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது இந்த அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

செய்தியாளர்: பேரறிவாளனுக்கு பரோலை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதே?

மு.க.ஸ்டாலின்: பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நலனைப் பொறுத்து அவரது பரோலை நீட்டிக்க வேண்டும் என்று ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் திமுக சார்பில் நான் இந்த அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன். தற்போது அவரது பரோல் முடியவுள்ள நிலையில், அதனை நீட்டிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்