தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கடந்த 12ஆம் தேதி வெளியானது. தேர்தல் முடிவுகளில் திமுக 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியது. குறிப்பாக மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 140 இடங்களில் 138 இடங்களை திமுக கைப்பற்றியது. இதன் மூலம் இந்த 9 மாவட்டங்களிலும் திமுக கூட்டணியே தலைவர் பதவியைக் கைப்பற்ற இருக்கிறது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலிலும் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி கைப்பற்றியது.
இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்ற 27 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகள் இன்று (20.10.2021) பதவியேற்க உள்ளனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பதவியேற்க உள்ளனர். மாவட்ட, ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் அடுத்த வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.