கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலைத் தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31/12/2021) மதியம் 12.30 மணியளவில் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு, ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா, மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள், சென்னையில் கூடுதல் கட்டுப்பாடு என்னென்ன விதிக்கலாம் என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று (31/12/2021) மாலை 05.00 மணியளவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கர்நாடகா, டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை ஏற்கனவே அமல்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.