திருவள்ளூர் மாவட்டம் அருகே தமிழக ஆந்திர எல்லையான பள்ளிப்பட்டில் விளைநிலங்களைக் காட்டுயானைகள் சூழ்ந்த நிலையில் அவை விரட்டியடிக்கப்பட்டுள்ளது.
நேற்று 3 காட்டு யானைகள் அங்கிருந்த கரும்புத் தோட்டத்தில் முகாமிட்டிருந்தது. காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுந்தது தெரிந்து தமிழக-ஆந்திர எல்லை கிராம மக்கள் அச்சத்திலிருந்தனர். திருத்தணி கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு வந்தனர். விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில், ட்ரோன் கேமரா மூலமாகவும் யானைகளை கண்காணித்தனர். கடந்த 1996 ஆம் ஆண்டு இதேபோல் காட்டுயானைகள் அந்த பகுதிக்கு வந்திருந்த நிலையில் மீண்டும் காட்டுயானைகள் வரவு அங்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று காலை பள்ளிப்பட்டு அருகே ஈச்சம்பாடி கரும்பு தோட்டத்தில் புகுந்த அந்த மூன்று காட்டுயானைகளையும் ஆந்திர வனத்துறை விரட்டியடித்துள்ளது.