நீலகிரியில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை, பேருந்தின் முகப்பு கண்ணாடியை உடைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் மேல்தட்டப்பள்ளம் எனும் மலை வழிப்பாதை உள்ளது. காப்புக்காடுகள் நிறைந்த இந்தப் பகுதியில் யானை, கரடி போன்ற வனவிலங்குகள் உள்ளன. இந்த வழியில் சாலையில் செல்லும் வாகனங்களைக் காட்டு விலங்குகள் வழிமறிப்பது அவ்வப்போது நடைபெறும் நிகழ்வாகும். இந்நிலையில் இன்று (25.09.2021) காலை சுமார் 8.30 மணியளவில் மேல்தட்டப்பள்ளம் மலைப்பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்த நிலையில், பேருந்தை வழிமறித்த காட்டு யானை ஒன்று எதிர்பாராதவிதமாக பேருந்தின் முகப்பு கண்ணாடியை உடைத்தது.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் சில நிமிடம் அச்சத்தில் உறைந்தனர். பேருந்தில் இருந்த ஒருவர் இதை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்ட நிலையில், அது வைரலாகிவருகிறது. சிறிது நேரத்தில் யானை பேருந்தின் பின்புறம் சென்றதால் பேருந்து மீண்டும் பயணத்தை தொடர்ந்தது.